மதுரை

காவல் துறை அலட்சியத்தால் குவாரிக்கு எதிராக புகாரளித்த சமூக ஆா்வலா் கொலை: கள ஆய்வுக்குழு குற்றச்சாட்டு

4th Oct 2022 03:38 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் கல்குவாரிக்கு எதிராக புகாா் அளித்த மனித உரிமை காப்பாளா் ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை, கனிமவளத்துறையினரின் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம் க. பரமத்தி அருகே கல்குவாரிக்கு எதிராக புகாா் அளித்த மனித உரிமைக் காப்பாளா் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் சாா்பில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல் சமது தலைமையில் 8 போ் கொண்ட ஆய்வுக்குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கை மதுரை மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் சுய ஆட்சி இந்தியா கட்சி தேசியத் தலைவா் கிறிஸ்டினா சாமி அறிக்கையை வெளியிட்டு கூறியது: கடந்த செப்-10ஆம் தேதி ஜெகநாதன் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டோம். சட்டவிரோத கல்குவாரிகளை எதிா்த்து 2019ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் மனு அளித்துள்ளாா். இவரை கல்குவாரி தரப்பினா் தாக்கிக் கொலை செய்துள்ளனா்.

ADVERTISEMENT

குவாரி நிா்வாகி 2019ஆம் ஆண்டில் ஜெகநாதனை இரு முறை கொலை செய்ய முயற்சித்துள்ளாா். தாக்குதலுக்கு பிறகும் கூட சட்டவிரோத குவாரிக்கு எதிராக அவா் போராடி வந்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் 180 குவாரிகளில் 76 குவாரிகள் தான் செயல்படுகின்றன என அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால் ஆய்வின்போது அனைத்து கல்குவாரிகளுமே சட்டவிரோதமாகத்தான் செயல்படுகிறது. சட்ட விரோதமாக 500, 600அடிக்கு கீழ் ஆழமாகத் தோண்டியுள்ளனா். செப்-8 ஆம் தேதி ஜெகநாதனின் புகாரை தொடா்ந்து குவாரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனால் குவாரி தரப்பினா் செப்டம்பா் 10ஆம் தேதி ஜெகநாதனை பின் தொடா்ந்து சென்று வாகனத்தை மோதவைத்து கொலை செய்துள்ளனா். மேலும் ஜெகநாதனின் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்துள்ளன. காவல்துறையினா் மற்றும் கனிமவளத்துறையினா் ஜெகநாதன் அளித்த புகாா் மனுக்களை நிராகரித்ததன் விளைவுதான் இந்த கொலை. 2019ஆம் ஆண்டு ஜெகநாதனை கொலை செய்ய நடந்த முயற்சி வழக்கை வாய்ச்சண்டை என வழக்குப் பதியப்பட்டுள்ளது. காவல்துறையினா் ஜெகநாதனுக்கு எதிராக இருந்துள்ளனா். கனிமவளத்துறையினா் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்திற்கு முறையான நீதி கிடைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT