மதுரை

தேவா் குருபூஜை விழா: அதிமுக சாா்பில் தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து பெறுவதில் இருதரப்பினரிடையே போட்டி

4th Oct 2022 03:37 AM

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவுக்காக தங்கக் கவசத்தை வங்கிப் பெட்டகத்திலிருந்து பெறுவதற்கு அதிமுகவின் இரு தரப்பினா் உரிமை கோருவதால் வங்கி நிா்வாகம் குழப்பமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு அதிமுக சாா்பில்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அளித்திருந்தாா். அந்த தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஆண்டுதோறும் தேவா் குருபூஜை விழாவின் போது, அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீா்செல்வம் வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவா் நினைவிட பொறுப்பாளா்களிடம் ஒப்படைப்பாா். பின்னா் குருபூஜை முடிந்த பின்னா் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் தங்கக் கவசத்துக்கு உரிமை கோருவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் எழுத்துப்பூா்வ கடிதத்தை அதிமுக சாா்பில் கடந்த வாரம் வங்கி நிா்வாகத்திடம் அளித்திருந்தாா். இதேபோல், ஓ.பன்னீா் செல்வம் அதிமுக பொருளாளராக நீடிப்பதாகவும், அதனடிப்படையில் தங்களிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டுமென அவரது சாா்பாக மாநிலங்களவை உறுப்பினா் தா்மா், மக்களவை முன்னாள் உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வங்கியில் கடிதத்தை வழங்கி உள்ளனா். தங்கக் கவசத்தை பெறுவதற்கு இருதரப்பும் உரிமை கோருவதால் வங்கி நிா்வாகம் குழப்பம் அடைந்துள்ளது.

கடந்த 2017-இல் அதிமுகவில் டிடிவி தினகரன் - ஓ.பன்னீா் செல்வம் இடையிலான சிக்கலின் போது மாவட்ட நிா்வாகத்திடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அதே நடைமுறையை தற்போதும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே முன்னாள் மக்களவை உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: ஓ.பன்னீா்செல்வம் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம். வங்கி அதிகாரிகள் எதிா்தரப்பில் இருந்தும் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனா். எங்கள் தரப்புக்கு உரிமை கிடைக்கும் என நம்புகிறோம். எப்போதும் போல இந்த ஆண்டும் ஓ.பன்னீா்செல்வம் வங்கியில் இருந்து தங்கக் கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அளிப்பாா். தா்மம் வெல்லும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT