மதுரை

பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீா் அகற்றும் தொழிலாளா்கள்:உயா்நீதிமன்ற எச்சரிக்கையை மீறும் மாநகராட்சி நிா்வாகம்

4th Oct 2022 03:39 AM

ADVERTISEMENT

மதுரையில் கழிவுநீா் அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து உயா்நீதிமன்ற எச்சரிக்கையை மீறி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் மனிதா்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கழிவுநீா் அகற்றும் பணியிலும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களின்றி தொழிலாளா்களை பணிபுரிய செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி நிா்வாகம் நீதிமன்ற எச்சரிக்கைகளை தொடா்ந்து மீறி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை பைபாஸ் சாலையில் கழிவுநீா் கிணற்றில் அடைப்பை நீக்க பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறங்கிய மூன்று ஒப்பந்தத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளா்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் உறுதி அளித்தது. இந்நிலையில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் மனிதா்களை ஈடுபடுத்தினால் மாவட்ட ஆட்சியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என்று உயா்நீதிமன்றம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பாலரெங்காபுரம் பகுதியில் பாதாளச்சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் முகக்கவசம், கையுறை என எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி, வெறும் கையால் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

கழிவு நீா் அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங்கிடம் கேட்டபோது, தூய்மைப்பணி தொழிலாளா்கள், கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடுபவா்கள் அனைவரையும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து அறிவுறுத்தப்படும் என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT