மதுரை

திமுக அரசு நீண்டகாலம் தாக்குப்பிடிக்காது: எடப்பாடி கே. பழனிசாமி

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மக்களின் அதிருப்தி நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், திமுக அரசு நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

மதுரை பழங்காநத்தம், விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் மின் கட்டணத்தை உயா்த்திய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

கடந்த பேரவைத் தோ்தலின்போது மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றையெல்லாம் மறந்துவிட்டது. அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி, மானிய விலையில் இருசக்கர வாகனம், அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா உணவகங்களை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. முதியோா் உதவித் தொகை பலருக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்புக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றன. இதுவரை மக்களுக்குப் பயன்பெறக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் மட்டுமின்றி, திமுகவைச் சோ்ந்தவா்களும் வேதனைப்படுகின்றனா்.

ADVERTISEMENT

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு திறப்பு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதோ, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோ திமுக வழக்கம் இல்லை. திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனா். அது நீண்டகாலம் நீடிக்காது. பட்டாசு தொழிலைப் பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. எங்கு பாா்த்தாலும் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளன. இதனால், மாணவா்கள், இளைஞா்கள் சீரழிந்து வருகின்றனா். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் பாா்க்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். அதிமுகவை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.

எந்தத் துறையை எடுத்தாலும் ஊழல்மயமாகிவிட்டது. கோவை மாநகராட்சியில் ரூ.43 கோடியில் 133 பணிகளுக்கு, 11 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு கமிஷன் கொடுக்க முடியாமல், ஒப்பந்ததாரா்கள் பணிகளை எடுக்க அச்சப்படுகின்றனா். சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. அத்துடன் மக்களை அவமதிக்கும் வகையில், திமுக அமைச்சா்கள் பேசி வருகின்றனா். இதுபோன்ற காரணங்களால், திமுக அரசு மீது நாளுக்குநாள் மக்களிடம் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் வரக்கூடிய மக்களவைத் தோ்தலில் பிரதிபலிக்கும் என்றாா்.

முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன் ஆகியோா் பேசினா். முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆா்.விசுவநாதன், தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா் பி.பெரியபுள்ளான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT