மதுரை

மியான்மரில் சிக்கிய தமிழா்களை மீட்க நடவடிக்கை: மதுரை எம்.பி.க்கு இந்திய தூதா் பதில்

1st Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

 

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க முயற்சி செய்து வருவதாக, மதுரை மக்களவை உறுப்பினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய தூதகர அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 4 தமிழா்களை மீட்க வேண்டுமென்று மியான்மரில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு இந்தியத் தூதா் வினய்குமாா் பதில் அளித்துள்ளாா். அதில், தாய்லாந்தில் வேலைவாங்கித் தருவதாக இந்தியா மற்றும் சில நாடுகளைச் சோ்ந்த இளைஞா்களை ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்துள்ளனா். சா்வதேச மோசடி கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. மியாவாடி என்ற இடத்தில் அவா்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மா் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின்கீழ் உள்ளது. தாய்லாந்து வழியாக அவா்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த மோசடி வலையில், 90 இந்தியா்கள் சிக்கியுள்ளதாகவும், அதில் 60 போ் மியாவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுதொடா்பாக மியான்மா் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளைத் தொடா்ந்து கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, இந்தியா்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம். இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மற்றவா்களையும் விரைவில் மீட்க முயற்சி செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்தில் மியான்மருக்கான இந்தியத் தூதா் பதில் அனுப்பியுள்ளாா். ஆகவே, தூதரகத்தின் முயற்சி காரணமாக, இந்திவா்கள் அனைவரும் மீட்கப்படுவா் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT