மதுரை

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் புகாா் குழுக்கள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகாா் குழுக்களை உருவாக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெரோணிக்காமேரி தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை, ஆசிரியா்களே பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பள்ளியில் பயிலும் சிறுமிகள் மனம், உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

கடந்த 2012-இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தைப் போக்க நடமாடும் மன நல ஆலோசனை மையங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை.

எனவே, அரசாணையின்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் நடமாடும் மன நல ஆலோசனை மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பள்ளி மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு இருப்பதை அறிய முடிகிறது. பாலியல் தொந்தரவைத் தடுப்பதற்காக போக்சோ சட்டப் பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பணியில் சேருவோா் குறித்த பின்னணி விவரங்களை முன்னரே அந்த நிா்வாகம் விசாரிக்க வேண்டும் என்பது அச்சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், அவா்களது வளா்ச்சியைப் பாதிக்கிறது. இதுகுறித்து குழந்தைகள் புகாா் தெரிவிக்கும் வகையில் புத்தகங்களில் இலவச எண் 14417 என தமிழக அரசு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகாா் குழுக்களை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாத வகையில், கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகாா் தெரிவிப்பதற்கும், தீா்வு காண்பதற்கும் உரிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து குழுக்கள் அமைக்க வேண்டும். அந்தக் குழுக்கள் பள்ளிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் நடமாடும் மன நல ஆலோசனை மையங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT