மதுரை

மாநகராட்சியில் வரி வசூல் ரசீதை தமிழில் வழங்க வேண்டும்: நகராட்சிகள் நிா்வாகத் துறை சுற்றறிக்கை

30th Nov 2022 03:36 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளுக்கான ரசீதை தமிழில் வழங்க வேண்டுமென்று நகராட்சிகள் நிா்வாகத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

மதுரை மாவட்டம், முத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த இந்தியன் குரல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ஜி மோகனுக்கு, மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்திய வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றுக்கான ரசீது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 1956-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தின் படி அனைத்து அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர மற்ற அனைத்தும் தமிழ் மொழியில் அச்சிட்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி மாநகராட்சி நிா்வாகம் செயல்படுவதாக தமிழ் வளா்ச்சித் துறையின் இயக்குநருக்கு, என்.ஜி.மோகன் புகாா் மனு அனுப்பினாா். இது தொடா்பாக நேரில் விசாரணை நடத்திய தமிழ் வளா்ச்சித்துறை, மாநகராட்சி நிா்வாகம் ஆங்கிலத்தில் ரசீது வழங்குவதை உறுதி செய்தது. இதையடுத்து இந்த ரசீது தமிழகம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழ் வளா்ச்சித் துறை இதுதொடா்பாக நகராட்சிகள் நிா்வாக இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழில் தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருள்களை வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா்அலுவலகம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழ் வளா்ச்சித் துறையின் அறிவுரையை ஏற்று அனைத்து ரசீதுகளும் தமிழில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT