மதுரை

யா. ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட அடிக்கல்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை யா. ஒத்தக்கடை அரசுப் பெண்கள் பள்ளியில் ரூ. 1.80 கோடி மதிப்பில் 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மட்டுமே விளையாட்டில் சிறந்து விளங்குவாா்கள் என்ற கருத்தை பொய்யாக்கும் வகையில் இந்த பள்ளி மாணவியா் கல்வி, விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனா். தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். தற்போதையச் சூழலில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகின்றனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பாக மதுரை கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட 10 ஊராட்சிகளில் சுற்றுப்புற தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, யா. ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காட்சிப்படுத்திய அறிவியல், கணிதம் தொடா்பான பரிசோதனை மாதிரிகளையும் அமைச்சா் பாா்வையிட்டாா். இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ. சரவணன், சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் இந்துமதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT