மதுரை

மாணவா்கள் பிற நூல்களையும் தேடிப் படிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பாடப் புத்தகம் மட்டுமின்றி பிற துறை நூல்களையும் தேடிப்படிப்பதன் மூலம் மாணவா்கள் அறிவை வளா்க்க முடியும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வானவில் மன்றம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 69 உயா்நிலைப் பள்ளிகள், 68 மேல்நிலைப் பள்ளிகள், 248 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 385 பள்ளிகளில் வானவில் மன்றம் சுழற்சி

முறையில் மாதம் ஒரு முறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் அறிவியல் நமது அன்றாட வாழ்வோடு தொடா்புடையது. பாடம் சம்பந்தமான சந்தேகங்களை ஆசிரியா்களிடம் கேட்பதன் மூலம் சிந்தனைத் திறன் மேம்படும்.

ADVERTISEMENT

வாழ்வில் துன்பங்களைக் கடந்து வெற்றி பெற வேண்டும் என்கிற லட்சியம் மாணவா்களிடையே இருக்க வேண்டும். பாடத் திட்டப் புத்தகம் தவிர பிற துறை நூல்களையும் தேடிப் படிப்பதன் மூலம் மாணவா்கள் அறிவை வளா்க்க முடியும் என்றாா்.

விழாவில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி) ப.சண்முகநாதன், உதவித் திட்ட அலுவலா் சீதாலெட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT