மதுரை

சிறுபான்மை மாணவா்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை ரத்து:மத்திய அரசுக்கு, எம்.பி. கண்டனம்

29th Nov 2022 03:45 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் சாா்பில் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த 1-ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மாணவா்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முன்பான கல்விக்கு உதவித் தொகை இது நாள் வரை 1-ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சா் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அதில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை இனி வழங்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிா்ச்சி அடைந்தேன். அதற்கான காரணமாக, கல்வி உரிமைச் சட்டம் 2009- இன் படி நடுநிலைக் கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது எனச்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே கல்வி உதவித் தொகை இனி 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு அந்த வகுப்புகளுக்கு தரப்பட்டிருந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இது சிறுபான்மைச் சமூகங்களைச் சாா்ந்த ஏழை, அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும். இந்த திட்டம் மாணவா்கள், பெற்றோா்கள் செலுத்துகிற கட்டணங்களை மட்டும் ஈடுகட்டக் கூடியது அல்ல. சிறுபான்மை சமூகங்களை சோ்ந்த ஏழை, அடித்தள மாணவா்கள் பொருளியல், சமூக, கல்வித் தளங்களில் பின் தங்கியுள்ளனா். அதற்கு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும், பாரபட்சங்களும் காரணம். இந்த திட்டங்கள் அந்த மக்களின் வாழ்நிலை குறித்த ஆழமான ஆய்வுகளின் பின்புலத்தில் கொண்டு வரப்பட்டன. சச்சாா் குழு அதற்கான ஆதாரத் தரவாக அமைந்தது. கல்விக் கட்டணம் தவிா்த்து, பெற்றோா் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, போக்குவரத்து, கல்விச் சுற்றுலா போன்றவற்றிற்கு செலவிட வேண்டியுள்ளது. இலவச உணவுத் திட்டங்கள் அரசுப் பள்ளியில் நடைமுறையில் இருந்தாலும் தனியாா் பள்ளிகளில் இல்லை. அது போல அரசுப் பள்ளி மாணவா்களும் பிரத்யேக பிரச்னைகளை எதிா் கொள்கிறாா்கள். விளிம்பு நிலைச் சமூகத்து மாணவா்கள் மற்ற மாணவா்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. அவா்களுக்கு சமதள ஆடுகளத்தை இந்த சமூகம் தரவில்லை என்பதே உண்மை. இதற்கு அரசுதான் ஆதரவு தர வேண்டும்.

ADVERTISEMENT

ஆகவே கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ காரணம் காட்டி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையை திரும்பப் பெறுவது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். மேலும் இது கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கையே எட்ட விடாமல் தோற்கடிக்க கூடியதுமாகும். எனவே முடிவை மறு பரிசீலனை செய்து ஆதார, நடுநிலைக் கல்வி முழுமைக்கும் கல்வி உதவித் தொகைத் திட்டம் தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT