மதுரை

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 265 கோடி நிதி நிலவரம்: பழங்குடியினா் நலத்துறைச் செயலா், இயக்குநா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 265 கோடி பிற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்தது மற்றும் நிதியை அரசுக்கு திரும்ப அனுப்பியது தொடா்பாக தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறைச் செயலா், இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த காா்த்திக் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக அரசு, மத்திய அரசு சாா்பில் கடந்த 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய நிதி ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 1,310 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளைச் சீரமைக்காமல் ரூ. 265 கோடி நிதி பிற துறைகள் மற்றும் அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 2019- 2020 நிதியாண்டில் வனத் துறைக்கு ரூ. 10 கோடி, 2020-2021 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ. 67.77 கோடி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ. 58.17 கோடி என மொத்தம் ரூ.129.09 கோடி பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்தது. தமிழகத்தில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்புகள், குடிநீா், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் முழுமையாக நடைபெறாமல் இருக்கும் நிலையில், அவா்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பிற துறைகளுக்குச் செலவு செய்வதும், மீதமுள்ள நிதி எனக் கூறி அரசுக்குத் திரும்ப அனுப்புவதும் ஏற்புடையதல்ல.

எனவே, 2018 முதல் 2021 வரை உள்ள நிதி ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியதையும், திருப்பி அனுப்பப்பட்ட ரூ. 265 கோடியையும் மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், எந்தத் துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்தத் துறைகளுக்கு மட்டுமே நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடா்பாக தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறைச் செயலா் மற்றும் அந்தத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT