தாட்கோ திட்டத்தில் மானியத்துடன் தீவனப்புல் வளா்க்க ஆதிதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் தீவனப்புல் வளா்க்க தாட்கோ மூலம் மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் மானியத்தில் விதைத் தொகுப்பு, புல் கரணைகள் வழங்கப்படும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த 18 முதல் 65 வயது வரையிலான விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்குப் பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக இணைய வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள், தொடா்புடைய பகுதியின் கால்நடை உதவி மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்.
தகுதியானவா்கள் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை, தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.