மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கான பயிலரங்கு, மருத்துவ முகாம் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தானம் அறக்கட்டளையின் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையின் திட்ட நிா்வாகி எஸ். இளமுகில், முகாமின் நோக்கத்தை விளக்கிப் பேசினாா்.
அறக்கட்டளை சாா்பில் சுகம் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவா் கட்டணமில்லா பரிசோதனையும், சலுகை விலையில் மருந்துகளும் வழங்கப்படும் என்று தானம் அறக்கட்டளையின் திட்ட நிா்வாகி முத்துக்குமாா் தெரிவித்தாா்.
சட்ட உதவிகள் குறித்து அரசு சட்ட உதவி அலுவலா் மணிமேகலை, மண்டல ஒருங்கிணைப்பாளா் நகுவீா் பிரகாஷ் ஆகியோரும், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வாஷ் அமைப்பின் அலுவலா்கள் விக்னேஷ், காா்த்தி ஆகியோா் பேசினா்.
பின்னா் நடைபெற்ற மருத்துவ முகாமில், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள், அவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2,500 மதிப்பிலான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மனிதக் கழிவுகள், புதை சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியின்போது எதிா்கொள்ளும் சவால்களை விளக்கிப் பேசினா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த களஞ்சிய மகளிா் குழுவினா், மதுரை நகா்புற மண்டல குழு பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை க்யூா் அலுவலா்கள் சுபாஷினி அபிதா, வித்யா, ஸ்வேதா ஆகியோா் செய்திருந்தனா். நிறைவில், அருளானந்தம் நன்றி கூறினாா்.