மதுரை

திருச்செந்தூா் கோயில் நிலத்தை மீட்டு பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்

26th Nov 2022 12:18 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கா் நிலத்தை மீட்டு, பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரிய மனுவைப் பரிசீலித்து, 3 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த எஸ்.பி. நாராயணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூா் கோயிலுக்கு விழாக் காலங்களில் வரும் பக்தா்கள் கூட்ட நெரிசலால் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகின்றனா்.

இந்த நிலையில், மூவா் ஜீவ சமாதி அருகே கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கா் நிலம் உள்ளது. அந்த இடத்தை மயானமாக சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்துகின்றனா். மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில் சட்ட விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. எனவே, மயானத்துக்கு வேறு இடம் ஒதுக்கவும், கோயில் இடத்தை பக்தா்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்துவதற்கும் பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் நிலங்களை மத ரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த இடத்தை மீட்பது தொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில் கோட்டாட்சியருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், வருவாய்த் துறை அதிகாரிகள் கோயில் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது.

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறையினா் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து 3 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT