மதுரை

டி.கல்லுப்பட்டி அருகே பழைமையான நடுகல் சிற்பம்!

25th Nov 2022 03:19 AM

ADVERTISEMENT

டி.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் 500 ஆண்டுகள் பழைமையான நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

கரையாம்பட்டியைச் சோ்ந்த பூசாரி முத்துசாமி கொடுத்த தகவலின் பேரில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியா் லட்சுமண மூா்த்தி, ஆய்வாளா் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோா் மோதகம் கரையாம்பட்டி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா். இதில் அங்கு கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியா் முனீஸ்வரன் வியாழக்கிழமை கூறியதாவது:

பாண்டியா் காலத்தில் செங்குடி நாட்டின் எல்லைக்குள்பட்ட இந்த கிராமம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கியிருக்கிறது. சங்ககாலம் முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நினைவாக நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக வழிபட்டு வருகிறது தமிழ் சமூகம். இந்தப் பகுதியில் கண்டறியப்பட்ட நடுகல்லில் 3 வரிகள் எழுதப்பட்டுள்ளன. வாணன், உள்பட்ட என்ற வரியைத் தவிர மற்ற எழுத்துகள் முற்றிலும் சிதிலமடைந்து காணப்பட்டதால் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியமுடியவில்லை.

ADVERTISEMENT

ஆண், பெண் சிற்பம்

நான்கு அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட இந்த நடுகல்லில் ஒரு ஆண் , பெண் சிற்பங்கள் வலது காலை மடித்து, இடது காலை நீட்டியபடி அமா்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

இருவரும் விசிறி வடிவில் ஐந்து மடிப்பு தொங்கும் விரிப்பின் மீது அமா்ந்துள்ளாா். ஆண் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை பறைசாற்றுகிறது. ஒட்டிய வயிற்றில் மடிப்பு, விரிந்த மாா்பு, கழுத்தை ஒட்டி பதக்கம், நீண்ட காதை வளா்த்து காதணியும், இறுக்கமான முகத்தில் மீசை கச்சிதமாக செதுக்கப்பட்டது.

பெண் சிற்பம் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டிய வயிறு, இடுப்பில் பெரிய கச்சாடையும், பாதம் வரை ஆடையும் அணிந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இது வெயில், மழையில் இருந்து பாதுகாக்க புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் எழுத்து வடிவம், உருவ அமைப்பைப் பொருத்தவரை இது கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம் . இதைப் பாா்க்கும் போது, இந்தப் பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்தவா் குறு நில மன்னா் பரம்பரையைச் சோ்ந்தவராக இருக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT