மதுரை

கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?

19th Nov 2022 12:15 AM

ADVERTISEMENT

கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை தமிழக சுற்றுலா, கலைப் பண்பாட்டுத் துறைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சமுத்திரம் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சாா்பில் இளைஞா்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், சிற்பக்கலை கற்பிக்கப்படுகின்றன. மேற்கண்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி வருகிறது.

இந்த விருது 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு ‘கலை இளமணி’ விருது, 19 முதல் 35 வயது வரை ‘கலை வளா்மதி’ விருது, 36 முதல் 50 வயது வரை ‘கலை சுடா்மணி’ விருது, 51 முதல் 60 வயது வரை ‘கலை நன்மணி’ விருது, 61 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு ‘கலை முதுமணி’ விருது என்கிற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்தவிதத் தகுதியோ, நெறிமுறையோ வகுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 2019-2020 -ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத நபா்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், அப்போது வழங்கப்பட்ட சான்றிதழில் உறுப்பினா், செயலா், தலைவா் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் வழங்கப்பட்டன. தகுதி இல்லாத நபா்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, 2019-2020 -ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவா்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளைத் திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், 2021- ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கலை பற்றி தெரியாதவா்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைத் துறையில் சாதனைகள் செய்தவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருதை, தற்போது 2 திரைப்படங்களில் நடித்து விட்டால் அவா்களுக்கு வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இயல், இசை, நாடக மன்றம் முறையாகச் செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தைக் கலைக்க நேரிடும்.

2021 -ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழக அரசின் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலா், இயல், இசை, நாடக மன்றத் தலைவா், உறுப்பினா் செயலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பா் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT