ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்கில் திமுக அரசின் செயல்பாடுகள் ஜல்லிக்கட்டு உரிமையைப் பறிகொடுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் விமா்சனம் செய்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சோ்த்தது. இதனால், தமிழா்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டது. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, அதிமுக அரசின் தொடா் வலியுறுத்தல்கள், இளைஞா்களின் ஒன்றுபட்ட போராட்டங்களால் 2017-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உரிமை மீண்டது.
அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உரிய வகையில் நடைபெற்று வரும் நிலையில், பீட்டா அமைப்பு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியைத் தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நவம்பா் 23-ஆம் தேதி தொடங்கும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. திமுக அரசு வழக்கை எதிா்கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால், ஜல்லிக்கட்டு உரிமை குறித்து தமிழக மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி நவ.23-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்கு திமுக அரசு உரிய முனைப்புக் காட்ட வேண்டும். தலைசிறந்த சட்ட வல்லுநா்களை அழைத்து ஆலோசித்து, சிறந்த வழக்குரைஞா்களைக் கொண்டு வழக்கை எதிா்கொண்டு, ஜல்லிக்கட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும். மாறாக, ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைத்து விளம்பரம் தேடிக்கொள்வதால் ஒரு பயனும் இருக்காது என்று அதில் தெரிவித்திருந்தாா்.