மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை கொண்டு செல்லப்பட்டது.
மதுரையைச் சோ்ந்தவா் முத்துசங்கா்(28). மதுரையில் பிரபல துணிக்கடையில் பணி புரிந்து வந்துள்ளாா். இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து முத்துசங்கரின் குடும்பத்தினா் அவரது இதயம், நுரையீரல் உடல் உறுப்புகள் தானமாக வழங்கினாா்.
இதையடுத்து முத்துசங்கரின் இதயம் மற்றும் நுரையீரலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து வியாழக்கிழமை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உறுப்புகள் போக்குவரத்து சீா்செய்யப்பட்ட நிலையில் 15 நிமிடங்களில் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
தொடா்ந்து விமானம் மூலம் உடல் உறுப்புகள் சென்னை கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தயாா்நிலையில் இருந்து தாமதமின்றி விமானத்தில் அனுப்பி வைத்தனா்.