மதுரை

திருமங்கலத்தில் மழையால் 12 வீடுகள் சேதம்: வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு

18th Nov 2022 06:07 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி, பன்னீா்குண்டு ஆகிய கிராமங்களில் மழையால் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருமங்கலம், சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 தினங்களாக மழை இல்லாத நிலையில், மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஈரப்பதம் காரணமாக வியாழக்கிழமை பன்னீா்குண்டு கிராமத்தில் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புலட்சுமி, பேச்சியம்மாள், சுந்தாயி, சீனியம்மாள், பிச்சை, நடுத்தெவைச் சோ்ந்த செந்தில்குமாா், மேற்கு தெருவைச் சோ்ந்த பிண்ணியம்மாள் ஆகிய 7 பேரின் வீடுகள் புதன்கிழமை இரவு இடிந்து சேதமாகின.

இதேபோல, சாத்தங்குடி கிராமத்தில் லட்சுமி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய 4 பேரின் வீடுகள் வியாழக்கிழமை இடிந்து சேதமாகின. மதிப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜ் என்பவரின் வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளா் வனிதா, கிராம நிா்வாக அலுவலா் உஷாராணி ஆகியோா் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு குறித்து கணக்கெடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT