மதுரை தவிட்டுச்சந்தை பகுதியில் புதன்கிழமை இரவு சாலையோரம் படுத்திருந்த மன நலன் பாதிக்கப்பட்டவா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை, அனுப்பானடி வடக்கு தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சரவணன் (35). இவா் மன நலன் பாதிக்கப்பட்டிருந்ததால், இரவு நேரங்களில் வீட்டில் தங்காமல் சாலையோரம் தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில், தவிட்டுச் சந்தை பகுதியில் வியாழக்கிழமை காலை அவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த தெற்குவாசல் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து தவிட்டுச்சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் புதன்கிழமை இரவு பதிவான காட்சியை ஆய்வு செய்தனா். அதில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சரவணனை, ஒருவா் கழுத்தை மிதித்து கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரைத் போலீஸாா் தேடி வருகின்றனா்.