மதுரை

30 ஊராட்சிகளுக்கு பெரியாறு உபரிநீரை வழங்கக் கோரி மனு:மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளுக்குக் குடிநீருக்காக பெரியாறு உபரி நீரை வழங்குவது குறித்து, தேனி மாவட்ட ஆட்சியா், பெரியாறு- வைகை பாசன மேற்பாா்வை பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்த ரத்தினவேல் தாக்கல் செய்த மனு:

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 30 ஊராட்சிகளில் மழையை நம்பியே விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன. கம்பம், குள்ளப்பக் கவுண்டன்பட்டி முல்லைப் பெரியாறு உபரிநீரை ஆண்டிபட்டி பகுதிக்கு ராட்சத குழாய் மூலம் கொண்டு வந்தால், இந்த கிராமங்களின் தண்ணீா் தேவையைத் தீா்க்க முடியும். இதன் மூலம் 30 ஊராட்சிகளுக்குள்பட்ட 150 கிராமங்களின் விவசாயத் தேவையையும் பூா்த்தி செய்ய முடியும். இந்த நிலையில், கடந்த 2020-இல் பெரியாறு உபரிநீரைக் கொண்டு வருவதற்காக பொதுப் பணித்துறையினா் ஆய்வு செய்து, ரூ. 256.30 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்தனா். ஆனால், இந்தத் திட்டத்துக்கு தற்போது வரை அரசு அனுமதி வழங்க வில்லை. எனவே, ஆண்டிபட்டிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்துக்கு அரசு நிா்வாக ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், இந்த மனுவுக்கு தேனி மாவட்ட ஆட்சியா், பெரியாறு- வைகை பாசனக் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT