மதுரை மாவட்டம், வடக்கம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என பாமக, மதுரை மாவட்ட (தெற்கு) தலைவா் த. முருகன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவா் அளித்த மனு விவரம்:
திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட வடக்கம்பட்டி அலகுசிறையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த 10-ஆம் தேதி பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 போ் உயிரிழந்ததாகவும், 15 போ் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கணக்கீடு நம்பகத் தன்மைக் கொண்டதாக இல்லை. மேலும், விபத்தில் இறந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையை அளவீடு செய்யும் முன்பாகவே நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
2009-ஆம் ஆண்டும் இதே போல ஒரு பெரும் விபத்து நேரிட்டது. எனவே, பட்டாசு ஆலை விபத்து குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தவிா்க்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.