மதுரையிலிருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படாததால், இரவு நேரத்தில் இவற்றில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மதுரை மாட்டுத்தாவணி, எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூா், கோவை, கரூா், சேலம், பழனி, பொள்ளாச்சி ஆகிய ஊா்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேருந்து நிலைய வளாகங்களில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் வீசப்படும் குடிநீா் காலி புட்டிகள், வெட்டப்பட்ட இளநீா் சிரட்டைகளில் மழைநீா் தேங்குகிறது. இதில் உருவாகும் ஏடி எஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகும் என மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கின்றனா். தொடா் மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் புறப்படும் அரசுப் பேருந்துகளில் அதிகளவு கொசுக்கள் உள்ளன. பேருந்துகளின் ஜன்னல்களும் மூடப்படுவதால் கொசுக்கள் வெளியேற முடியாமல் கடிப்பதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் கொசு மருந்து அடித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.