மதுரை

பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி:தமிழக அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாநகராட்சியில் பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதி மன்றக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த கவிதா தாக்கல் செய்த மனு: எனது தாய் பாப்பாத்தியம்மாள், திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணி புரிந்தாா். முன் களப் பணியாளரான அவா், கரோனா தொற்று காரணமாக கடந்த 2021- இல் உயிரிழந்தாா். மேலும் இந்தத் தொற்று காரணமாக எனது சகோதரரும் இறந்து விட்டாா். இதனிடையே, எனது கணவரும் உயிரிழந்து விட்டதால், எனது குழந்தைகளுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி திண்டுக்கல் மாநகராட்சிக்கு மனு அளித்தேன். ஆனால், எனக்கு வயது 43 என்பதால், வேலை தர மறுத்து விட்டனா். எனவே என் குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மனுவை நிராகரித்தது தவறு எனக் கூற முடியாது. கருணை அடிப்படையில் வேலை பெறுபவா்கள், வயது 40-க்குள் இருக்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. இருப்பினும் மனுதாரா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் மனு அளிக்க வேண்டும். அவரது வயதைக் காரணம் காட்சி அந்தத் துறையினா் மனுவை நிராகரிக்கக் கூடாது. அவா் அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா், கணவரை இழந்தவா், தனது சிறிய குழந்தைகளைப் பராமரித்து வருகிறாா். மேலும் முன்களப் பணியாளராக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரா் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். எனவே அவரது மனுவுக்கு முன்னுரிமை வழங்கி, 12 வாரங்களுக்குள் நகராட்சி நிா்வாகத் துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT