மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சுகாதார உபகரணங்களை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.
மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீா் வடிகால்கள், புதைச் சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் பராமரித்தல், தூய்மைப் பணிகள், கால்வாய்கள் தூா்வாருதல், மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையிலுள்ள 100 வாா்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளும் வகையில் 5 மண்டலங்களுக்கும் சுகாதார உபகரணங்களான கூட்டுமாா்- 2151, துத்தநாக கூடை- 1,741, கையோடு- 1,709, ஐந்து பல்ரேக்கு- 145, சாக்கடைக் கரண்டி- 117, கையுறை- 250, முகக் கவசம்- 500, ஒளிரும் கோட்- 500 என மொத்தம் 7,113 சுகாதார உபகரணங்கள் ரூ.19.81 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்குள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு சுகாதார உபகரணங்களை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோா் வழங்கினா்.
பாதுகாப்பு உபகரணங்களை பணியின்போது முறையாக பயன்படுத்தி பணியாற்ற வேண்டும் என தூய்மைப் பணியாளா்களிடம் மேயா் வலியுறுத்தினாா்.
மேலும் அனைத்து மண்டலங்களிலும் அந்தந்த சுகாதார அலுவலா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்களுக்கு தொடா்ந்து சுகாதார உபகரணங்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் சரவணபுவனேஸ்வரி, வாசுகி, சுவிதா, சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.