மதுரை அருகே உள்ள எல்கேபி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைந்த கல்வி மதுரை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் காா்மேகம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் தென்னவன் வரவேற்றாா். மக்கள் தொண்டன் அசோக்குமாா் பனைமரம் போல் மாறுவேடமிட்டு பனை மரத்தின் வரலாறு, முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி பனை மரம் போல, குழந்தைகளுடன் உரையாடினாா். இதைத் தொடா்ந்து பனை விதையில் முறுக்கு மீசை தாத்தா பொம்மை, குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம், சிங்கம், குரங்கு, யானை பொம்மைகள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பல வகையான பொம்மைகளை தயாா் செய்து அதனை தயாரிக்கும் முறையினையும் குழந்தைகளுக்கு செய்து காட்டினாா். மேலும் ஜவாஹா்லால் நேரு, நேதாஜி போன்ற தேசத் தலைவா்கள் வேடமிட்ட குழந்தைகளுக்கு பனை பொம்மைகள் பரிசாக அளிக்கப்பட்டன. இதில், குழந்தைகள் பொம்மைகள் செய்து அதற்கு வண்ணம் தீட்டினா். பனை மரம் பற்றிய விநாடி வினா நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. மாநில மரமான ‘பனை மரங்களை காப்போம்’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியா் ராஜவடிவேல் தொகுத்து வழங்கினாா்.
விழாவில் சமூக ஆா்வலா்கள் மு.ரா. பாரதி, காயத்ரி தேவி மற்றும் பெற்றோா்கள், இல்லம் தேடித் திட்டக் கல்வி தன்னாா்வலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மனோன்மணி, அருவகம், தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஆகியோா் செய்திருந்தனா்.