மதுரை

மேலூா் வாரச் சந்தையில்நாற்று நடும் போராட்டம்

14th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

 

மேலூா் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலூா் நகராட்சி நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த சந்தையில், ஞாயிற்றுக்கிழமை மாடுகளுக்கான சந்தையும், திங்கள்கிழமை ஆடுகளுக்கான சந்தையும் நடைபெற்று வருகிறது. இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடை ஒன்றுக்கு ரூ. 148 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த வளாகத்தின் ஒருபகுதியில் மேலூா் தினசரி காய்கறி சந்தையும் செயல்படுகிறது. மற்றொரு பகுதியில் உழவா் சந்தையும், குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பிரிவும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இங்கு மழைநீா் வெளியேற வடிகால் வசதி இல்லை. வாரச் சந்தையில் மாடுகள் அனைத்தும் சேறும் சகதியுமான இடத்திலேயே நிறுத்தப்பட்டு, விற்பனை நடைபெறுகிறது. இதையடுத்து, சந்தை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஆனால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

ADVERTISEMENT

தினசரி காய்கறிச் சந்தையிலும் இதே நிலையில் உள்ளதால், சேறும், சகதியில் நாற்றுக்களை நடவு செய்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தினசரி மக்கள் பயன்படுத்தும் காய்கறிச் சந்தையும் சுகாதாரக் கேடாக உள்ளது. இதைக் கண்டித்து இந்த போராட்டத்தில் பொது மக்களும் கலந்துகொண்டனா். தகவலறிந்த மேலூா் நகராட்சி அலுவலா்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT