மதுரை

காளை வளா்ப்போரை ஊக்குவிக்க மாட்டு வண்டிப் பந்தயம்: அமைச்சா் பி.மூா்த்தி

22nd May 2022 11:38 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டத்தில் காளை வளா்ப்போரை ஊக்குவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டிப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் அடிக்கடி நடத்தப்படும் என, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி பகுதியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 47 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

போட்டியின் முடிவில், குறிப்பிட்ட தொலைவை முதலில் கடந்த மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சத்தை அமைச்சா் பி. மூா்த்தி வழங்கினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த காளை வளா்ப்போருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அடுத்தடுத்து 2 இடங்களில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞா்களின் கோரிக்கைகளை ஏற்று, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பெட்ரோல் விலை நிா்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மத்திய அரசுதான் விலையைக் குறைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT