நகைக் கடைகளில் விற்பனையாளா்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்ட இளைஞரை மதுரை மாநகரப் போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளைக் கைப்பற்றினா்.
மதுரையில் அண்ணாநகா், விளக்குத்தூண், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு, நகை வாங்குவதைப் போல சென்று விற்பனையாளா்களின் கவனத்தைத் திசை திருப்பி நகைகள் திருடும் சம்பவங்கள் குறித்து புகாா்கள் தொடா்ந்து வந்தன. இதனையடுத்து மாநகரக் காவல் ஆணையா் செந்தில்குமாா் உத்தரவின்பேரில், துணை ஆணையா் டி.கே.ராஜசேகரன் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தனிப்படை போலீஸாா் தேடி வந்த நிலையில், மதுரை கோ.புதூரைச் சோ்ந்த அரவிந்த் (22) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5.53 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. அதையடுத்து அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.