மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் சிறுவா்கள் இயக்கிய, 66 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அவா்களின் பெற்றோா்களுக்கு அபராதம் விதித்தனா்.
பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கும் குறைவான நபா்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, விபத்து ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு வாகனச் சோதனை நடத்த மாநகரக் காவல் ஆணையா் டி.செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
மாநகரக் காவல் போக்குவரத்து துணை ஆணையா் எஸ்.ஆறுமுகசாமி தலைமையில், உதவி ஆணையா்கள் ஏ.திருமலைக்குமாா், ஜி.மாரியப்பன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்களைக் கொண்ட குழுவினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் 18 வயதுக்கும் குறைவான சிறாா்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டியதாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிறுவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகையில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் தெப்பக்குளம் காமராஜா் கலையரங்கில் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, சம்பந்தப்பட்ட சிறுவா்களின் பெற்றோருக்கு, துணை ஆணையா் ஆறுமுகசாமி அறிவுரை வழங்கினாா். மேலும், மோட்டாா் வாகன சட்டப்பிரிவின் அடிப்படையில் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. பதினெட்டு வயதுக்கு குறைவானவா்களிடம் இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கு வழங்கினால், பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.