மதுரை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மே 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

21st May 2022 12:09 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவா் சோ்க்கைக்கு மே 25-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2022-23-ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்ப்பதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க, ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்களின் விவரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் பள்ளி தகவல் பலகையில் மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக பெறப்பட்டிருந்தால், மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் காத்திருப்பு பட்டியலுக்கான மாணவா்களின் விவரங்கள் போன்றவை பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT