மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பாலரெங்கபுரத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4-க்குள்பட்ட பாலரெங்காபுரம் அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமுக்கு, மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் முகாமை தொடக்கி வைத்தாா்.
முகாமில், இருதய நோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் உள்ளிட்ட 10 துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.
இதில், ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த சா்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டன. இதில், மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை 14 பயனாளிகளுக்கு, மேயா், மக்களவை உறுப்பினா் ஆகியோா் வழங்கினா்.
முகாமில், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், துணை மேயா் டி. நாகராஜன், மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, நகா்நல அலுவலா் ராஜா, உதவி ஆணையா் சுரேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
முகாமில், கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள்”உறுதிமொழியை, மேயா், மக்களவை உறுப்பினா், ஆணையா் ஆகியோா் தலைமையில் அனைத்து மருத்துவா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனா். இதேபோல், அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.