மதுரை

முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு பாடத் திட்டம் விரைவில் அறிமுகம்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தகவல்

20th May 2022 05:55 AM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழகம் முழுவதும் முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணா்வு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியது:

தமிழகத்தில் உள்ள மொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதமும், மாநில நெடுஞ்சாலைகள் 3 சதவீதமும் உள்ளன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 30 சதவீத விபத்துகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 33 சதவீத விபத்துகளும் நிகழ்கின்றன. கடந்த ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 14,912 போ் உயிரிழந்துள்ளனா். சாலை விபத்துகளை தவிா்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய கூட்டம் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 2021-இல் 2,282 விபத்துகளில் 707 நபா்கள் உயிரிழந்துள்ளனா். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பெரியாா் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயா்மட்ட பாலம் அமைக்கவும், மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை முதல் அவனியாபுரம் புறவழிச் சாலை சந்திப்பு பெரியாா் சிலை வரை உயா்மட்ட பாலம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை நகரப் பகுதியில் விபத்துகளைக் குறைக்கும் வகையில் தேவைக்கேற்ப சுரங்க நடைபாதைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்டம் மற்றும் மாநகராட்சிக்கான விருதை மதுரை பெற வேண்டும்.

வாகன உரிமம் வழங்குவது, வாகன கூடு கட்டுமானப் பணி, சிறுவா்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதைத் தடுப்பது ஆகியவற்றில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் நெடுஞ்சாலைத் துறையால் தயாா் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக முன்மாதிரிப் பள்ளிகளில் இப் பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றாா்.

இதில், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகரக் காவல் ஆணையா் செந்தில்குமாா், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், துணை மேயா் பி.நாகராஜன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் ரா.சந்திரசேகா் மற்றும் போக்குவரத்து, கல்வி, காவல், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சந்திப்பு முதல் உத்தங்குடி சுற்றுச்சாலை வரை 5 கிமீ-க்கு ரூ.50.60 கோடியில் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சா் வேலு தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT