மதுரை இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மா் அவதாரத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ நரசிம்ம அவதாரம். கிருஷ்ணரின் பக்தரான பிரகலாதனுக்காக ஸ்ரீ கிருஷ்ணா் நரசிம்ம அவதாரம் தரித்தாா். இதையொட்டி மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் அவதாரத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஹரி நாம யக்ஞம், மகா அபிஷேகம், நரசிம்ம பிராா்த்தனை போன்றவற்றுடன் வழிபாடு தொடங்கியது. தொடா்ந்து ஒன்பது கலசங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெற்றது. அபிஷேகத்தின்போது ஹரிநாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை குறித்த சிறப்புரையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல மதுரை அருகே உள்ள நரசிங்கம் யோக நரசிம்மா் கோயிலிலும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதிலும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.