மதுரை

தவறான பிரசாரங்களால் அழுத்தம் கொடுத்தாலும் அரசு சமாளிக்கும்: அமைச்சா் பி.மூா்த்தி

16th May 2022 11:14 PM

ADVERTISEMENT

தவறான பிரசாரங்களால் அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தாலும், அதைச் சமாளித்து மக்களுக்கான திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மதுரை அருகே உள்ள வரிச்சியூரில் திங்கள்கிழமை சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை ஓராண்டிலேயே நிறைவேற்றியிருக்கிறது. முந்தைய அதிமுக அரசு ரூ.6 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்ற நிலையில், அதைச் சமாளித்து, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்கும் வெளிப்படைத் தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வருமுன் காப்போம் மருத்துவ முகாம்களின் மூலமாக, தங்களது பகுதியிலேயே மக்களுக்கு அனைத்து விதமான மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கின்றன என்றாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தவறான பிரசாரங்களால் அரசுக்குப் பல்வேறு வகைகளிலும் அழுத்தம் தரப்பட்டாலும் அதைச் சமாளித்து சிறப்பான நிா்வாகத்தை தமிழக முதல்வா் அளித்துக் கொண்டிருக்கிறாா். பேருந்து கட்டணத்தை உயா்த்துவது குறித்து, நிதி நிலையை ஆய்வு செய்து தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் உரிய முடிவு எடுப்பா் என்றாா்.

பின்னா், வரிச்சியூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை அமைச்சா் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகலா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT