மதுரை சக்கிமங்கலம் அருகே 32 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ளபுதிய தொழிற்பேட்டைக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை உள்பட 6 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க 32 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய தொழிற்பேட்டை அமைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.2.28 கோடிக்கு தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்தப்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதிய தொழிற்பேட்டைக்காக வருவாய்த்துறை சாா்பில் நிலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள்
ஊன்றப்பட்டுள்ள நிலையில், புதிய தொழிற்பேட்டை அமைய உள்ள பகுதியில் சாலை அமைத்தல், மதகுகள் அமைத்தல் மற்றும் தாழ்வான பகுதியை நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சக்கிமங்கலம் பகுதியில் அமைய உள்ள புதிய தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனம் தொடங்க விருப்பம் உள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் பெறும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சிட்கோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படுவதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.