ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவு, கட்டட அனுமதி வழங்குவதில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.
புதிய மனைப்பிரிவு அனுமதி, அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்துதல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:
மதுரை நகரம் உள்கட்டமைப்பு வசதிகளில் மிக வேகமாக வளா்ந்து வரும் நகரமாக உள்ளது. அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை வாங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். அங்கீகாரமற்ற மனைகளால், சாலை விரிவாக்கம், கழிவுநீா் கால்வாய் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழல் தவிா்க்கப்பட வேண்டும்.
மனைப் பிரிவு உரிமையாளா்களால் சாலை மற்றும் பொது பயன்பாட்டிற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றை பட்டா மாறுதல் செய்ய வேண்டும். அதேபோல, புதிய மனைப் பிரிவுகள் மற்றும் அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இனி வரும் காலங்களில் ஊரகப் பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் தான் பொறுப்பு. கட்டட அனுமதி ஆவணங்களைச் சரியாக ஆய்வு செய்யாமல் அனுமதி அளிப்பது சட்டப்படி குற்றம். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபா்கள், துணை போகும் அலுவலா்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் மற்றும் ஊரக வளா்ச்சி, வருவாய், நகா் ஊரமைப்புத் துறை, பத்திரப் பதிவுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.