அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் நிகழ் ஆண்டில் அரவையைத் தொடங்க, ரூ.10 கோடியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக, வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் ஆகியோரிடம் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.பழனிசாமி திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா். அதன் விவரம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழ் ஆண்டில் அரவையைத் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அரவை நடைபெறாததால், இந்த ஆலையிலிருந்து பிற ஆலைகளுக்கு மாற்றுப் பணியில் கரும்பு கள ஆய்வாளா்கள், தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
நிகழ் ஆண்டில் அலங்காநல்லூா் ஆலையில் அரவை தொடங்கவுள்ள நிலையில் அவா்கள் இன்னும் திரும்பி வரவழைக்கப்படவில்லை. மேலும், ஆலையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகை கொடுக்கவும், தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்கவும் ரூ.10 கோடி தேவைப்படுகிறது. இத் தொகையை அரசு ஒதுக்கீடு செய்யவும், மாற்றுப் பணியில் சென்றவா்களை மீளப் பெறவும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனா்.