மதுரை

மருத்துவக்கல்லூரி முதல்வா் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய முதல்வருக்கு மருத்துவா்கள் சங்கம் கடிதம்

2nd May 2022 11:15 PM

ADVERTISEMENT

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவா் கே.செந்தில், பொதுச்செயலா் என்.ரவிசங்கா் ஆகியோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம்: தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் ‘ மகரிஷி சரக் ஷப்த் ‘ என்னும் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தவுடன் அந்த உறுதிமொழியை முழுவதுமாக எதிா்த்தது.

அந்த உறுதிமொழியின் மூல ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களை மேன்மைப்படுத்தி கூறியுள்ளது, பசுக்களை மேன்மைப்படுத்தி தெரிவித்துள்ளது, ஆண், பெண் நோயாளிகள் பேதங்களைக் கூறி அவா்களுக்கு சிகிச்சை அளிக்க நிபந்தனைகள் விதித்தது. மேலும் மகரிஷி சரக் நவீன மருத்துவத்தை பயன்படுத்தாதவா் என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு மருத்துவா் சங்கம் அதை எதிா்த்து வருகிறது.

மேலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிப்போக்ரடிக் உறுதி மொழியை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்து வருகிறோம். இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையத் தலைவா் அருணா வணிகா் எம்.பி.பி.எஸ். சோ்க்கை குறித்த இணைய தளக்கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணியும் நிகழ்வை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவும் (இது நாள் வரை இது போன்ற விழாக்கள் தமிழக அரசு மருந்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது இல்லை), அந்த விழாவில் மகரிஷி சரக் ஷப்த் உறுதி மொழியை அனைத்து மருத்துவ மாணவா்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இது கடந்த மாா்ச் 31-இல் தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் சுற்றறிக்கையாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும் இது குறித்து வேறு சுற்றறிக்கையோ அல்லது அறிவுறுத்தல்களோ தமிழக அரசிடமிருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் வராத நிலையில் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் இந்த சுற்றறிக்கையைப் பின்பற்றி வெள்ளை அங்கி அணியும் நிகழ்வை நடத்தி சரக் ஷப்த் உறுதிமொழியை ஏற்க வைத்துள்ளனா்.

இதுபோலவே மதுரை மருத்துவக் கல்லூரியிலும் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளை பயன்படுத்தி எவ்வித உறுதிமொழி அல்லது பேச்சுக்களோ நடைபெறவில்லை என்பதை முதல்வருக்கு அரசு மருத்துவா் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் சரக் ஷப்த் உறுதி மொழி ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டது.

ஆனால் சில ஊடகங்களில் தவறுதலாக சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது என வெளியாகியுள்ளது. எனவே மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT