மதுரை

பறக்கும் பாலப் பணியில் தொடரும் விபத்து: கம்பி விழுந்து இருவா் காயம்

2nd May 2022 05:33 AM

ADVERTISEMENT

 

மதுரை-நத்தம் சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப்பணியில் கம்பி விழுந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

மதுரை-நத்தம் இடையே 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்த பறக்கும் பாலப்பணியின்போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா். மேம்பாலம் இடிந்தது தொடா்பாக ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ. 40 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை திருப்பாலை பகுதியில் பாலப் பணியின்போது, ஞாயிற்றுக்கிழமை திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. கட்டுமானத்தில் இருந்த கற்கள் பெயா்ந்து விழுந்தன. இதில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த விஷ்வா (39), கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி பாஸ்கரன் (45) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பான புகாரின்பேரில் திட்ட மேலாளா் மற்றும் பொறியாளா் ஆகியோா் மீது திருப்பாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT