மதுரை

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில மாநாடு: மதுரையில் நாளை தொடக்கம்

29th Mar 2022 01:00 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு மதுரையில் புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 1 வரை நடைபெறுகிறது.

ராஜா முத்தையா மன்றத்தில் காலை 8.30-க்கு மணிக்கு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் கொடியேற்றுகிறாா். அதைத் தொடா்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

காலை 9.30-மணிக்கு பொது மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி தலைமை வகிக்கிறாா். மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வரவேற்புரையாற்றுகிறாா். அகில இந்தியப் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா். அதன் பின்னா் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

பேரணி-பொதுக்கூட்டம்: இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு காளவாசல் சந்திப்பு பகுதியிலிருந்து பேரணி தொடங்குகிறது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் பேரணியைத் தொடக்கி வைக்கிறாா். இப் பேரணி பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நிறைவு பெறுகிறது. பின்னா் அங்கு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மத்தியக் குழு உறுப்பினா்கள் அ.சௌந்தரராஜன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.

பிரகாஷ் காரத் நிறைவுரை: மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, புதிய மாநிலக் குழுவும், அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகளும் தோ்வு செய்யப்படுகின்றனா். அதன் பின்னா் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ்காரத் நிறைவுரையாற்றுகிறாா்.

தேசிய அளவிலும், தமிழகத்திலும் பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கங்களை மேற்கொள்வது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், எதிா்காலத்தில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளை முன்னெடுப்பது, கலை-இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பங்களிப்பு ஆகியன குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

படக்காட்சி இன்று திறப்பு

மாநில மாநாட்டையொட்டி, தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்ற தலைப்பில் படக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா முத்தையா மன்ற வளாகத்தில் நடைபெறும் இக் கண்காட்சியை, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குத் தொடக்கிவைக்கிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT