மதுரை

பேரையூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

28th Mar 2022 03:04 PM

ADVERTISEMENT

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ரொக்கப் பணம் ரூ.87,000  பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு கார்கள், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பேரையூர்-சாப்டூர் சாலையில் தொட்டணம்பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. மாந்தோப்பை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருவது போல அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரை சரக டிஐஜிக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் மதுரை சரக டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்.பி. பாஸ்கர் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் கௌதம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டபோது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் பேரையூர் டி.எஸ்.பி. சரோஜா உத்தரவின்பேரில் ஆய்வாளர் காந்தி தலைமையிலான சாப்டூர் காவல் நிலைய காவலர்கள்  காலை சம்பவ இடத்திற்கு வந்து தோப்பில் உள்ள அறைக்குள் சந்தேகப்படும் படியாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மூடைகளை பிரித்துப் பார்த்தபோது அறைகளுக்குள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கணேஷ், வேல், விமல், கூல் லீப் உள்ளிட்ட நிறுவனங்களின் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

ADVERTISEMENT

இதனையடுத்து காவல்துறையினர் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 133 மூட்டைகளில் இருந்த 1872 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப் பணம் ரூபாய் 87 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட வந்த இரண்டு கார்கள், சரக்கு வாகனத்தையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண்பாண்டியன்(27), அவருடன் தங்கியிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நென்மணியைச் சேர்ந்த சரவண மணிகண்டன்(33), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முத்துக்குமார்(25) என மூவரையும் சாப்டூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 30 லட்சம் வரை இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மாந்தோப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT