உர மூட்டைகளை மாவட்டம் விட்டு மாவட்டம் எடுத்துச்செல்ல அனுமதிக்கக் கோரும் மனுவை, பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உரம் மொத்த விற்பனையாளா்கள் சங்கம் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. உரங்களை மாவட்டம் விட்டு மாவட்டம் எடுத்து செல்லக் கூடாது என வேளாண் துறை கடந்த 2020 ஜூலை 7 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் உரம் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறு வியாபாரிகளின் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் உரம் கொண்டு செல்ல அனுமதிக்கவும், வேளாண் துறையின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததாா். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, 8 வாரத்திற்குள் தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தாா்.