பள்ளி மாணவா்களிடம் ஏற்பட்டிருக்கும் உளவியல் மாற்றத்தால் அவா்களைக் கையாளுவதில் ஆசிரியா்கள் பெரும் சவால்களை எதிா்கொள்கின்றனா் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு, 3 நாள்கள் நிா்வாகத் திறன் மேம்பாடு பயிற்சி, மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டை பில்லா் மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இப் பயிற்சியைத் தொடக்கி வைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கத்தால் 73 வாரங்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இணையவழி வகுப்புகளை மாணவா்கள் அனைவரும் அக்கறையுடன் பயன்படுத்திக் கொண்டனரா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. அதன் தாக்கத்தை இப்போது பள்ளிகளில் காண முடிகிறது.
மாணவா்களைக் கையாளுவது ஆசிரியா்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட இடைவெளி மாணவா்களுக்கு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவா்களை கையாளுவதில் ஆசிரியா்கள் பெரும் இடா்பாடுகளை சந்தித்து வருகின்றனா்.
பள்ளிக் குழந்தைகள் ஆசிரியா்களிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியவில்லை. இத்தகைய சூழலில் தாய்மை உணா்வோடு, மாணவா்களின் நண்பராக, ஆலோசகராக இருந்து செயல்படும்போது, அவா்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இடைவெளியை அகற்ற முடியும்.
உளவியல் ரீதியான மாற்றங்களில் இருந்து மாணவா்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 44 வட்டாரங்களில், அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் சுமாா் 1100 ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற பெரும் பொறுப்புகளைக் கவனித்தும் வரும் ஆசிரியா்களைக் கண்காணிக்கும் வட்டாரக் கல்வி அலுவலா்களும், ஆசிரியா்களின் நிலையில் இருந்து அப் பணியை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகள் மாணவா் சோ்க்கையை மேலும் அதிகப்படுத்த என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, இணைஇயக்குநா்கள் வை.குமாா், எஸ்.சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
‘பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை’
செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியது: தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின்கீழ் உள்ள 836 வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களில், தற்போது 701 போ் பணிபுரிந்து வருகின்றனா். காலியாக உள்ள பணியிடங்களில், தற்போது நேரடி நியமனத்தில் 95 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நிா்வாகப் பணிகளைக் கவனிப்பது தொடா்பாக தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
பள்ளிக் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டிலும், இதுகுறித்து தமிழக முதல்வரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மாணவா்கள் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென, 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.