மதுரை மத்திய சிறையின் உணவுக் கூடத்துக்கு, உணவு பாதுகாப்புத் துறையின் தரச்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் திங்கள்கிழமை வழங்கினாா்.
உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் புகையிலைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் உணவுப்பாதுகாப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருள்களைத் தடை செய்வது தொடா்பாக காவல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து செயலாற்ற அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவுகள் வழங்கப்படுவதற்காக மதுரை மத்திய சிறையின் உணவுக் கூடம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் உணவுக் கூடம், சுகாதாரமான பிரசாதம் வழங்குவதற்காக இரு கோயில்கள் மற்றும் 4 உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் தரச் சான்றிதழ்களை ஆட்சியா் அனீஷ்சேகா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் வி.ஜெயராம பாண்டியன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள், நுகா்வோா் அமைப்பினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.