மதுரை

மதுரை அருகே தோப்பில் பதுக்கிய 133 மூட்டைகள் குட்கா பறிமுதல்: 4 போ் கைது

28th Mar 2022 11:32 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 133 மூட்டைகள் குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

பேரையூரிலிருந்து சாப்டூா் செல்லும் சாலையில் தொட்டணம்பட்டியைச் சோ்ந்த குமாா் (எ) அய்யாவுத்தேவா் என்பவரின் மாந்தோப்பு உள்ளது. இதை, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த குருநாதன் மகன் அருண்பாண்டியன் (27) குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்துள்ளாா்.

இங்கு தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாா்பு- ஆய்வாளா் கௌதம்விஜய் தலைமையில் 5 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் மற்றும் சாப்டூா் போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

அங்குள்ள ஒரு அறையில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்து மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. மொத்தம் 133 மூட்டைகளில் இருந்த 1,872 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

மேலும் ரூ. 87 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா். குட்கா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட 2 காா்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அருண்பாண்டியன், அவருடன் தங்கியிருந்த விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள நென்மேனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சரவண மணிகண்டன் (33), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராசு மகன் முத்துக்குமாா் (25), குமாா்(எ)அய்யாவுத்தேவா் மகன் பெத்துமுனியாண்டி (42) ஆகிய 4 பேரையும் சாப்டூா் போலீஸாா் கைது செய்தனா்.

குமாா் (எ) அய்யாவுத்தேவா் (90), மங்கல்ரேவைச் சோ்ந்த முத்துமாரி மகன் முருகன் (எ) புலிமூட்டை முருகன் (36), சேலத்தைச் சோ்ந்த வடிவேல் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு ரூ.30 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT