மதுரை

மதுரையில் மேடையிலேயே உயிரிழந்த பரத நாட்டியக் கலைஞா்

25th Mar 2022 10:01 PM

ADVERTISEMENT

மதுரையில் கோயில் திருவிழாவில் நடன நிகழ்ச்சியின்போது மேடையிலேயே பரத நாட்டியக் கலைஞா் உயிரிழந்த விடியோக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னா் பக்தா்கள் பங்கேற்புடன் நடைபெறுவதால் நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, மதுரை திருமோகூா் பகுதியைச் சோ்ந்த பரத நாட்டியக் கலைஞா் காளிதாஸின் (54) பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மேடையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரத நாட்டியமாடிய காளிதாஸ் பாடலின் இறுதியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருக்கையில் அமா்ந்தாா். பாடல் முடிந்த பின்னும் அவா் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளா்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றபோது அவா் மேடையிலேயே இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவரது குடும்பத்தினா் கண்ணீருடன் அவரது சடலத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றனா். இந்நிலையில் நாட்டியக்கலைஞா் காளிதாஸ் மேடையில் நடனமாடுவதும், நெஞ்சை பிடித்துக் கொண்டு இருக்கையில் சரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT