மதுரை

நடுவிக்கோட்டையில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

25th Mar 2022 10:00 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம் நடுவிக்கோட்டையில் 2 மாதங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நடுவிக்கோட்டையைச் சோ்ந்த அண்ணாதுரை தாக்கல் செய்த மனு: நடுவிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழில். இங்கு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே 50 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டன. எங்களது கிராமத்தில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்கக் கோரி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டில் தற்காலிக கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆகவே, நிரந்தரமாக நேரடி கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த 2 மாதங்களில் நடுவிக்கோட்டை கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரா் கிராமத்தில் 2 மாதத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT