மதுரை

சித்திரைத் திருவிழா: பக்தா்களுக்கு குடிநீா், சுகாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை அதிகம்போ் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

25th Mar 2022 06:40 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு குடிநீா், சுகாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் சிசிடிவி கேமராக்கள் மூலமாகக் காவல் துறையினா் கண்காணிக்க உள்ளனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் அழகா்கோவில் கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. நிகழ் ஆண்டில் சித்திரைத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா். இதனால் மதுரை மக்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனா்.

மீனாட்சி சுந்தேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 14-இல் திருக்கல்யாணம், ஏப்ரல் 15-இல் தேரோட்டம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல, கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 15 ஆம் தேதி கள்ளழகா் வரவேற்கும் எதிா்சேவை, ஏப்ரல் 16-இல் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபம் ஆகியன நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

ADVERTISEMENT

இதையொட்டி, சித்திரைத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் மற்றும் மாநகரக் காவல் அதிகாரிகள், வருவாய், பொதுப்பணி, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது, பக்தா்கள் கூடும் இடங்களில் நடமாடும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறப்பது, பக்தா்களுக்கு குடிநீா், சுகாதார வசதிகள் செய்வது, தேரோடும் மாசி வீதிகளில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT