மதுரை: குரங்கனி தீவிபத்து வழக்கு தொடா்பாக பதிலளிக்க அரசுத் தரப்பு அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னையில் டிரக்கிங் கிளப் நடத்தி வரும் பெல்ஜியத்தை சோ்ந்த பீட்டா் வான் கெய்ட் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள அனுமதி பெற்று, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 27 பேரை பயிற்சியாளா்கள் மலைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியதில், பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் 4 போ் உள்பட 23 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து, அவா்கள் 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் வனப் பகுதிக்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் எனக்கு எந்த தொடா்பும் இல்லை. ஆனால் என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, உயா்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை மாா்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.